தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும் பகுதி- 2
Origin and development of Tamil characters in tamil.!
எழுத்து :
★ எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர்.
★ எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.
எழுத்துரு மாற்ற வரலாறு..!
★ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்
★ மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது.
★ ஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர். மொழியைப் பற்றி விரிவாக எழுதப் புகுந்த எஸ்பெர்ஸன் (Gesperson) அவர்கள்,
" மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்கு பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்.
★ அதன் பிறகு பொருளின் பண்புகளை தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாக குறுக்கெழுத்துப் போல ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இட்டு வழங்கினான்.
★ அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது" எனத் தம் அரிய ஆராய்ச்சி நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார்.