பிராகிருதம் பற்றிய வியப்பான தகவல்கள்..!
1.இந்தி, மராட்டி, குஜராத்தி, வங்காளி முதலிய வட இந்திய மொழிகள் பிராகிருத வடிவத்திருந்து பிறந்தன; இம்மொழி பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.
2.பிராகிருதம் பற்றிய வியப்பான விஷயம் அதில் முதலில் கிடைப்பது உரை நடை (Prose) ஆகும். உலக மொழிகள் அனைத்திலும் முதலில் கிடைப்பது (Poetry) கவிதைகள். ஆனால் பிராக்ருதத்திலோ அசோகனின் கல்வெட்டு வாசகங்கள். அது கவிதை நடை இல்லை.
3.சமண மதம்
சமண தீர்த்தங்கரர்களின் போதனைகள் ப்ராக்ருதத்தில் உள்ளன. அவர்களுடைய முக்கிய மந்திரங்களும் இதே மொழியில் உள்ளன.
4.வாக்பதிராஜ என்ற புகழ்பெற்ற கவிஞர் கூறுகிறார் ,
“கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி மழையாகப் பொழி ந்து ஆறாக ஓடி கடலையே அடைவது போல எல்லா மொழிகளும் பிராக்ருதத்திலிருந்து தோன்றி பிராக்ருதத்திலேயே சங்கமம் ஆகின்றன”.
சயலாவோ இமாம் வாயா விசந்தி எத்தோ யா னேந்தி வாயாவோ
ஏந்தி சமுத்தம் ச்சிய னேந்தி சாயராவோ ச்சிய ஜலாயிம்
—-கௌடவாஹோ
5.மஹாவீரர் , மாமன்னன் அசோகன், காரவேலன் ஆகியோர் செய்திப் பரிமாற்றத்துக்கு பிராகிருத மொழியையே பயன்படுத்தினர்.
6.சமண ஆகமங்களும் அசோகர், காரவேலன் கல்வெட்டுகளும் இம்மொழியில் இருக்கின்றன. 2000 கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் உள்ளன. தமிழ் நாட்டின் பல பழைய பிராமி லிபி கல்வெட்டுகளும் இதில் அடக்கம்.
7.வியப்பான ஒரு விஷயம் பிராகிருத மொழி இலக்கணத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினர்
8.பிராக்ருதத்தில் பல வகைகள் உண்டு- மஹாராஷ்ட்ரீ , சூரசேனி ,மாகதி , பைசாசி , ஆபப்ராஹ்மச
பிராகிருத பல்கலைக்கழகம்
9.கர்நாடகத்திலுள்ள சிரவண பெலகோளாவில் மிகப்பெரிய பிராகிருத நூலகம் உள்ளது. அங்குதான் மௌர்ய சந்திரகுப்தர் தவம் செய்து உயிர்விட்டார். அவருடைய குருவின் பெயர் ஸ்ருதகேவலன் பத்ரபாஹு . ஆகவே இந்த இடம் 2500 ஆண்டு வரலாறு உடையது . அங்குள்ள கோமடேஸ்வரரின் பிரம்மாண்டமான ஒற்றைக் கல் சிலை , சமண மத நம்பிகை இல்லாதோரையும் ஈர்த்திழுக்கும். .அங்குள்ள மடத்தின் தலைவர் ஸ்வஸ்தி ஸ்ரீ சாரு கீர்த்தி பட்டாராக பட்டாச்சார்ய சுவாமிகள் பெரிய அறிஞர் ; பல் மொழி வித்தகர். அவர் போன்களையோ மொபைல் போன்களையோ பயன்படுத்தாத அதிசயப்பிறவி. பெரிய சொற்பொழிவாளர் ; நூலாசிரியர் அவருடைய முயற்சியின் பேரில் அங்கு பிராகிருத பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது.
10.தர்ம அறிவுரை
அசோகரின் கிர்னார் கல்வெட்டு எண் மூன்றில் காணப்படும் வாசகம்
‘பிராணானாம் சாது அனாரம்போ , அபவ்யயதா ஆபத்பாந்ததா சாது’
அஹிம்சை என்பது எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும்.குறைவாக செலவு செய்வதும், குறைவாக சேர்த்துவைப்பதும் நன்மை பயக்கும்.
கிர்னார் மலையின் 12ஆவது கல்வெட்டில் அசோகன் சொல்கிறார்,
‘ஸவபாசந்தா பஹூசுதா வ அ சு , கலா னாகமா வ அசு’
எல்லா சமய பிரிவினரும் மற்றவர் சொல்வதையும் கேட்டு, பொது நல சேவை செய்ய வேண்டும் .
இவ்வாறு உயரிய கருத்துக்களை இம்மொழி பரப்பியதோடு வரலாற்றை அறியவும் உதவுகிறது.
11.பிராகிருத மொழி வளர்ச்சி
ஏழு வகை பிராக்ருதத்திலும் நிறைய நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டு இந்திய வரைபடத்தில் மொழிகளைக் குறித்து, இலக்கியப் படைப்புகளை எழுதினால், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் நூல்கள் அல்லது கல்வெட்டுகள் அல்லது ஓலைச் சுவடிகள் இருப்பதைக் காணலாம். அத்தனை பேரும் தர்ம, அர்த்த, காம , மோக்ஷத்தைப் போற்றி எழுதினர். ஒரே பண்பாடு, ஒரே நம்பிக்கைகள்!
xxx
பத்தாம் நூற்றாண்டு முதல் ஸுரசேனி வகையே கவிதையிலும் நாடகத்திலும் பயன்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை ‘சத்தக’ (SATTAKA) இலக்கியத்திலும் இதைக் காணலாம் . இதன் பிறப்பிடம் மத்திய இந்தியா என்றும் மற்ற கிளை மொழிகள் இதிலிருந்து உதித்ததாகவும் அறிஞர்கள் செப்புவர். இது திகம்பர பிரிவினரின் முக்கிய மொழியாகத் திகழ்ந்தது.
நாடகங்களில் பயன்பட்டது – ஸுரசேனி . காளிதாசர் முதலியோர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகங்களிலும் பிராகிருத வசனம் உண்டு. முக்கிய சில கதாபாத்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும், ஏனையோர் பிராக்ருதத்திலும் பேசுவதைக் காணலாம். சூத்ரகர் எழுதிய ம்ருச்சகடிக நாடகத்தில் இதைத் தெளிவாகக் காணலாம்
சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள், வேலைக்காரர்கள் இப்படி கொச்சை மொழியில் பேசுவர்.
18ம் நூற்றாண்டு வரை சம்ஸ்க்ருத நாடகங்களில் இந்தப் போக்கைப் பார்க்கிறோம்
சமணர்களின் புனித நூல்கள் பயன்படுத்துவது அர்த்தமாகதி ; பௌத்தர்கள் பயன்படுத்துவது மாகதி ; இலக்கண கர்த்தாக்கள் பின்பற்றுவது ஆர்ச ; ஒவ்வொருவரும் தங்கள் மொழியே மூல மொழி என்பர்.
xxxx
சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட மொழி. பேச்சு வழக்கில் இருந்த கொச்சை மொழிக்கு பிராகிருதம் என்று பெயர். ஆனால் காலப்போக்கில் அதற்கு என்று தனி இலக்கணம் வகுத்தனர். அதில் கவிதை நூல்கள், அறிவியல் நூல்கள் தோன்றின. அதுவே பெரிய இலக்கியமாக உருவெடுத்தது. மூல சம்ஸ்கிருத மொழி தெரியாதவர்களுக்கு அது புது மொழியாகத் தோன்றும் . வட இந்தியா முழுதும் பரவியதால் காலப்போக்கில் அவைகளே தனி மொழியாக வளர்ந்தன . 2000 ஆண்டுகளுக்கு மேல் இப்படி வளர்ந்து வந்திருக்கிறது இன்றும் கூட சம்ஸ்கிருதம் அறிந்தோர் வட இந்திய மொழிகள் எதுவானாலும் அதைப் புரிந்துகொள்ள முடியும். தர்ம என்பதை பாலி மொழியில் ‘தம்ம’ என்பர். இந்திக்காரர்கள் ‘தரம்’ என்பர்.தமிழர்கள் ‘அறம்’ என்பர். சம்ஸ்கிருத வேதத்திலுள்ள ‘தர்ம’ தெரிந்தவர்களுக்கு மற்ற மூன்று சொற்களையும் புரிந்து கொள்வது எளிது.
இதற்கு இணையாக எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால் தமிழில் இப்போது வரும் கதைப் புத்தக நடையை பிராக்ருதத் தமிழ் என்றும், நாட்டுப்புறப் பாடல்களை பிராக்ருதத் தமிழ் கவிதைகள் என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பேச்சு மொழி பிராகிருதம்; இலக்கண /இலக்கிய மொழி சம்ஸ்கிருதம்.
இதை புரிந்து கொள்ள தமிழ்த் திரைப்பட மொழி உதவும். அரசர் வேடத்தில் வருவோர் பேசுவது இலக்கிய மொழி; ஆண்டி வேடத்தில் வருவோர் பேசுவது கொச்சை மொழி.
பாலி என்னும் பிராகிருத மொழியை பௌத்தர்கள் அதிகம் பயன்படுத்தினர். பிராக்ருதத்தை சமணர்கள் அதிகம் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் இதற்கெல்லாம் மூல மொழி. அதை இந்துக்கள் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் அறிந்தோர் இவ்விரு மொழிகளையும் புரிந்துகொள்ள முடியும்.