பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் (நவிரமலை) ஜவ்வாதுமலையில் கண்டெடுப்பு |3 Late Chola Period Stones (Naviramalai) Discovered at Javvadumalai

பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் (நவிரமலை) ஜவ்வாதுமலையில் கண்டெடுப்பு
|3 Late Chola Period Stones (Naviramalai) Discovered at Javvadumalai


ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், ஜவ்வாதுமலைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, வரலாற்றுச் சிறப்பு கொண்ட 3 நடுகற்களை ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியது: ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலைப் பகுதியில் எங்களது ஆய்வுக்குழு தொடர்ச்சியாகக் கற்கோடாரிகள், கற்திட்டைகள், நடுகற்கள், கல்வெட்டுகள் எனக் கண்டறிந்து வருகிறோம். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரும்பள்ளி, பெரும்பள்ளி, கல்லாவூர் ஆகிய ஊர்களில் மூன்று நடுகற்களைக் கண்டெடுத்துள்ளோம்,


இவை மூன்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளாகும். ஒன்றாவது நடுகல்லானது, கல்லாவூர் - பெரும்பள்ளி கூட்டுச்சாலையில் பெருமாள் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டெடுத்தோம். கி.பி 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் 6 அடி உயரமும், 4 அடி அகலமும், முக்கால் அடி பருமனும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும், கழுத்தில் 2 ஆரங்களும், காதுகளில் பெரிய கர்ண குண்டலங்களும், தலைப்பாகை பெரிய சுங்குடனும் காணப்படுகின்றது. இடுப்பில் இடைக் கச்சுடன் கூடிய குறுவாளும், இந்த கச்சை 4 மடிப்புகளுடன் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கால்களில் வீரக் கழல்களும், கைகளில் வீரக்கடகங்களும் அணிந்த கோலத்தில் நடுகல் வீரன் காணப்படுகிறார்.


நடுகல் வீரனின் தலைப்பகுதிக்கு மேலாக கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு எழுத்துகளில் பிற்காலச் சோழர்களின் 12 ம் நூற்றாண்டிற்கு உரியதாகத் தோன்றுகிறது. ஜவ்வாதுமலையிலுள்ள கல்லாவூர் - பெரும்பள்ளி பகுதியில் நடைபெற்ற பெரும் போரில் தம் ஊரைக் காத்து உயிர் விட்ட வீர மறவனுக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் தற்போது சிதைந்துள்ளன. 'கன்னாடு' என்று முடிய கூடிய வாசகம் இந்த நடுகல்லில் இடம் பெற்றுள்ளது.


இந்த வீர நடுகல் போர் புரியும் கோலத்தில் உள்ளது. இந்த நடுகல் வீரனின் கழுத்துப்பகுதியில் மூன்று அம்புகளும், வயிற்றுப்பகுதியில் மூன்று அம்புகளும் என 6 அம்புகள் எதிரிகளால் செலுத்தப்பட்டு வீரத்துடன் உயிர் நீத்த செய்தியை இந்த நடுகல் நமக்கு காட்டுகிறது. இந்த நடுகல் வீரனின் கால்களுக்கடியில் 2 வீரர்கள் மாண்டு போன கோலத்தோடு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இப்பகுதியில் நடைபெற்ற போரில் இந்த வீரர்கள் மாண்டதை இந்த நடுகல் நமக்கு காட்டுகிறது. 2-வது நடுகல்லானது, ஜவ்வாதுமலையிலுள்ள பெரும்பள்ளி என்ற ஊரில் உள்ள சிவாலயத்துக்கு அருகே உள்ள விநாயகர் கோயிலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்த நடுகல் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும், அரை அடி பருமனும் கொண்ட பலகைக்கல்லில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேல்பக்கம் வாரி முடிக்கப்பட்டக் கொண்டையும், காதுகளில் கர்ண குண்டலங்களும், வலது கையில் குறுவாளும், இடது கையில் அம்பும் உள்ளன.


இடையில் கச்சையும் அதில் குறுவாள் ஒன்றும் காணப்படுகிறது. கழுத்தில் மாலை போன்ற அமைப்பும் கால்களில் வீரக்கழலும் உள்ளன. இதில், பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஊரைக் காத்து வீரமரணம் அடைந்த பெரும்பள்ளியைச் சேர்ந்த வண்ணான் என்ற வீரனுக்கு இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல, 3 வது நடுகல்லானது பெரும்பள்ளியில் உள்ள நிலத்து வரப்பில் புதைந்த நிலையில் உள்ளது. 3 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற அழகான பலகைக் கல்லில் இந்த நடுகல் வீரன் அமைந்துள்ளான். நேராகப் பார்த்த நிலையில் முகம் அமைந்துள்ளது.


வலது கையில் அம்பும் இடதுகையில் வில்லும் உள்ளன. வலது தோளின் பின்புறம் அம்புக் கூடு ஒன்றுள்ளது. இடையில் கச்சையுடன் கூடிய குறுவாள் உறை ஒன்றும் உள்ளது. இவ்வீரனின் இடது காலுக்கருகில் குரைக்கும் உருவத்தில் நாய் ஒன்று உள்ளது. போரின் போது இவ்வீரனுக்கு அவனுடைய நாய் உதவி, போரில் வீரனோடு அந்த நாயும் இறந்து போயிருக்க வேண்டும். இதை தான் இந்த நடுகல் எடுத்துரைக்கிறது.


திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் ஏராளமான பல வரலாற்றுத் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எங்களது ஆய்வுக்குழு 12 நவிரமலை கல்வெட்டுகளை இந்த மலையில் கண்டறிந்துள்ளது. எனவே, ஜவ்வாதுமலையின் சங்ககால பெயரான "நவிரமலை" என்ற பெயரை இந்த மலைக்கு தமிழக அரசு சூட்ட வேண்டும்’’ என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” என்றார்.



 


Post a Comment

Previous Post Next Post