தொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை..!
Tolkappiyar kalattil eluttu nilai in tamil..!
Kalvettuiyal,
★ தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில்(கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர்.
★ அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு(டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழகம் எல்லை பெற்றது.
★ "வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர்,
"வடசொற் கிளவி வடவெழுத்த் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே."
என வட சொல் தமிழில் கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார்.
★ இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழி யாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை.
★ அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.
★ இப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. " சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
★ இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும் கிடைத்துள்ளன.
★ அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர்.
★ அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் " திருநாதர் குன்று " என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப்பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.