சேலம் ஏற்காடு கல்வெட்டுக்கள்..!
Salem Yercaud Inscriptions
Kalvettuiyal,
★ சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் ஊராட்சி கோயிலூர் கிராமத்தில் வாணீஸ்வரர் என்ற சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 கல்வெட்டுக்கள்.
★ ஏற்காட்டில் கல்வெட்டுடன் கூடிய கோயில் கண்டறியப்படுவது இதுவே முதன் முறையாகும்.
★ வாணியாற்றுக்கு கிழக்கு கரையோரம் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.
★ கல்வெட்டுகள் இந்த பகுதியை பெருமாமலை எனவும் இங்குள்ள இறைவனை பெருமாமலை நாயினார் மற்றும் பள்ளத்தல உடையார் பெருமாமலை நாயினார், வன அபயங்கார காத்தராயன் பெருமாமலை நாயினார் என்றும் குறிப்பிடு கின்றன.
★ இப்பகுதியை கற்கடராயன் என்ற குறுநில மன்னர்கள் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கீழ் ஆட்சி செய்துள்ளனர்.
★ இக்கோயிலில் கற்கடராய குல மன்னர்களின் நான்கு கல்வெட்டுக்கள் காணப் படுகிறது.
★ இந்த மலையின் கீழ் பகுதி அடிவாரத்துக்கு சற்று தொலைவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரூர் நகரம் வருகிறது.
★ அரூரில் உள்ள காளியம்மன் கோயிலில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றிலும், தர்மபுரி அரியநாதர் கோயிலில் மூன்றாம் இராசராசன் காலத்து கோயில் கல்வெட்டு ஒன்றிலும் சிவகாதசேகர கற்கடமாராயன் கண்ணன் படலன் என்பவனின் பெயர் வருகிறது.
★ இதன் மூலம் தர்மபுரி, அரூர், ஏற்காட்டின் இந்த பகுதிகள் கற்கடமாராயன் குலத்தை சேர்ந்த குறுநிலமன்னர்கள் ஆட்சி புரிந்ததை அறிய முடிகிறது.
கல்வெட்டு கூறும் செய்திகள்
★ இக்கோயிலின் கருவறையின் தெற்கு குமுதப்படையில் இருவரிகளில் கல்வெட்டு உள்ளது.
★ இராசராச கற்கட மாரன் ஆதித்த மலைபெருமாள் பாதபத்தன் வண்டாவர் என்ற குறுநில மன்னன் வன அபயங்கார காத்தராயன் பெருமாமலை நாயினார் என்ற இந்த இறைவனுக்கு பண்டாரவாயன் சந்தி என்ற பூசை செய்வதற்காக பிலாக்காடு என்ற பகுதியை தேவதானமாக கொடுத்ததை குறிப்பிடுகிறது.
★ இக்கோயிலின் அர்த்தமண்டபம் முப்பட்டை குமுதத்தில் ஓர் கல்வெட்டு உள்ளது.
★ இது இராசராச கற்கடமாராயன் என்ற மன்னனின் ஆட்சியில் முதன்மையானவராக இருந்த சகாத்தாரான மழவராயன் என்பவர் பெருமாமலை நாயினாருக்கு இரவும் பகலும் விளக்கு எரியும் வண்ணம் திருநுந்தாவிளக்கு எரிக்க பிலாக்காடு என்ற இடத்தில் நிலம் கொடுத்த செய்தியை குறிக்கிறது.
★ வடக்கு அர்த்தமண்டபம் முப்பட்டை குமுதத்தில் இரண்டு வரிகளில் கல்வெட்டு உள்ளது.
★ இது இராசராச கூலசகா கற்கடமாராயன் எய்ரையர் என்பவர் பெருமாமலை நாயினாருக்கு உச்சி சந்தியமுது என்ற பூசை செய்ய குட்டுமுட்டல் என்ற பகுதியை தானம் செய்துள்ளார்.
★ இந்த தானத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட் டுள்ளது. பிலாக்காடு, குட்டு முட்டல் என தானம் செய்யப்பட்ட பகுதிகள் இன்றளவும் இதே பெயரில் அப்பகுதில் அழைக்கப்பட்டு வருகின்றன.
★ வடக்கு பக்கம் முப்பட்டை குமுதத்தில் இரு வரிகளில் ஓர் கல்வெட்டு உள்ளது. இது கோச்சடபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சிரி சுந்தரபாண்டிய தேவரரின் 9ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும் .
★ இப்பகுதி அப்போது சேலநாடு என அழைக்கப்பட் டுள்ளது.இப்பகுதிக்கு சேலஞ்சுற்றிய சேலநாட்டு ராமன் என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
★ இவரின் மற்றொரு கல்வெட்டு இப்பகுதிக்கு அருகே உள்ள சிறுமலை என்ற இடத்தில் சென்ற ஆண்டு சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் கண்டறியப்பட்டது.
★ சேலநாட்டு ராமன் கீழ் ஆட்சி செய்த இராதிராச குலசேகர கற்கடமாராயன் பெருமா மலையில் இருக்கும் பள்ளத்தல உடையார் பெருமாமலை நாயினார் கோயிலில் பூசைகள் செய்த மூவருக்கு தானம் செய்ததை குறிக்கிறது.