பூலாங்குறிச்சிக் கல்வெட்டு தரும் அறியதகவள்கள்..!
Pulankuricci Kalvettu Tarum Ariyatakavalkal in tamil..!
பெயர் :
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு (Pulankuricci Kalvettu)
இடம் : சிவகங்கை மாவட்டம், (முன்பு – தேவர் திருமகனார் மாவட்டம்)
வட்டம் : திருப்பத்தூர்
அமைவிடம் : பூலாங்குறிச்சி, கண்மாய் மதகையொட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட்டுள்ளன.
காலம் : பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு
மொழி : தமிழ்
எழுத்து : வட்டெழுத்து
★ பொதுவாக தமிழகத்தில் பொ.ஆ 6 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் ஒரு வரி முதற்கொண்டு 5, 6 வரிகளைக் கொண்ட சிறியக் கல்வெட்டுக்களாகவே உள்ளன.
★ ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் மட்டும் பெரிய அளவில் அதிக வரிகளைக் கொண்டு விளங்குகின்றன.
★ இவ்விடத்தில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று முழுவதும் சிதைந்துள்ளது.
★ மீதமுள்ள 2 கல்வெட்டுக்களில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது அதில் முதல் 9 வரிகள் முற்றிலும் சிதைவுண்டுள்ளன.
★ அதற்கு அடுத்த வரிகளும் இடையிடையே எழுத்துக்கள் படிக்க இயலாத வண்ணம் உள்ளன. இருப்பினும் ஆர்.நாகசாமி, நடனகாசிநாதன், எ.சுப்பராயலு, ராகவ வாரியார் போன்ற கல்வெட்டு பேரறிஞர்கள் இக்கல்வெட்டினைப் படித்துப் பொருள் தந்துள்ளனர்.
★ மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் ஒரு சில சொற்கள் இடையிடையே சிதைவுற்றுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டு முழுவதும் படித்துணரப் பெற்றுள்ளது.
★ அக்கல்வெட்டுகளின் பாடங்கள் இறுதியில் கொடுக்கப் பெற்றுள்ளன.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் முக்கியத்துவம்:
★ தமிழக வரலாற்றுப் புணரமைப்பிற்கு ஒரு மைல் கல்லாகும். பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு 6 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள சான்றுகள் அருகியே இருந்தன. இக்காலத் தமிழகம் களப்பிர அரசர்களால் ஆளப்பட்டுள்ளது. எனவே இக்காலம் தமிழகத்தின் இருண்டக்காலம் என்று அழைக்கப் பெற்றது.
★ இக்கல்வெட்டில் சேந்தன் கூற்றன் என்ற அரசர்களது பெயர்கள் கிடைத்துள்ளன.
★ களப்பிரர்கள் சமண, புத்த சமயத்தை மட்டுமே ஆதரித்துள்ளார். அவர்கள் இந்துக்களால் கலி அரசர் என்று அழைக்கப் பெற்றுள்ளனர் எனக் கருத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
★ இக்கல்வெட்டில் மேலும் பிரம்மதாயம், மங்கலம் போன்ற குறிப்புகளுடன், தேவகுலம், கோட்டம் என்ற குறிப்புகளும் உள்ளதால் களப்பிரர்கள் பிராமணர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதும் இந்து கோயிலுக்கும் அறப்பணிகள் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
★ தேவகுலம், தாபதப்பள்ளி, வாசிதேவனார் கோட்டம், விரும்மச்சாரிகள், தருமிகள் முதலிய சொற்களும் சமய உலகில் வடக்கிலிருந்து வந்த தாக்கத்தை வெளிப்படுத்து கின்றன.
பிரம்மதாயங்கள் : பிரமதேயங்கள் பல்கத் தொடங்கிய காலம் இது என்பதை வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதாயம் முதலியன உணர்த்தும்.
★ இவற்றின் விளைவாக நில உரிமைகளில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. நிலக்கிழார், உழுவோர் என்ற வேறுபாடுகளும் நிலக்கிழமை (மீயாட்சி) வேறு, உழும் உரிமை வேறு என்றும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாகத் தொடங்கி விடுகின்றன. இங்கும் காவியகாலச் சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சங்க மருவிய கால வரலாற்றுக்குப் புதிய விளக்கத்தைப் பெற உதவுகிறது.
★ இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. மெய் எழுத்துக்கள் அனைத்திற்கும் புள்ளியிடப் பெற்றுள்ளது.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் தற்போதய நிலையும் எழுத்தமைதி யும்:
★ கல்வெட்டுப் பொறிப்பின் இடத்தையும் அளவையும் பார்க்கும் பொழுது இக்கல்வெட்டுக்களை மௌரியப் பேரரசன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்களுக்கு ஈடாகக் கூறலாம்.
★ இவை பெரிய எழுத்துக்களையும் நீண்ட வரிகளையும் கொண்டுள்ளன. இடது கல்வெட்டும் நடுக்கல்வெட்டும் ஒவ்வொன்றும் சுமார் 5 மீட்டர் உயரமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டுள்ளன.
★ மேலிருந்து கீழ் நோக்கி வர வரிகளின் நீளம் அதிகமாகின்றது. வலது கல்வெட்டு இரண்டு மீட்டர் உயரமும் 5 மீட்டர் அகலமும் உடையது. முற்றிலும் எழுத்துக்கள் 5 முதல் 17 செ.மீ உயரமும் கொண்டுள்ளன.
★ எழுத்துக்கள் ஆழமாக வெட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பாறையைச் செதுக்கிச் சமம் செய்யாமலே எழுத்துக்கள் வெட்டப்பட்டதனால் பல இடங்களில் பாடம் பெறுவது கடினமாக உள்ளது.
★ மேலும், இப்பாறை இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்டிருப்பதால் பல நூற்றாண்டுகள் மழையிலும் வெயிலிலும் இருந்து கல்வெட்டுகள் ஆங்காங்கு தேய்ந்தும், சிதைந்தும் உள்ளன.
★ நடுக்கல்வெட்டு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இடதுபக்கக் கல்வெட்டின் முற்பகுதி பெரிதும் சிதைந்துவிட்டது. வலதுபக்கக் கல்வெட்டு மட்டும் பெரும்பகுதி நல்ல நிலையில் உள்ளது.
இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன.
★ எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும் பொழுது மூன்று கல்வெட்டுக்களுக்குள் வேறுபாடு ஏதும் இல்லை. உயிரெழுத்துக்களில் – அ, இ, உ, எ, ஒ ஆகியவற்றின் வரிவடிவங்கள் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய உயிர்நெடில் வரிவடிவங்கள் காணப்படவில்லை.
★ இவ்வெழுத்துக்கள் இக்கல்வெட்டுக்களில் வரும் சொற்களில் பயிலப் பெறாமையால் அவற்றின் வடிவங்களை இங்குக் காணமுடியவில்லை.
★ தமிழில் அமைந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிவடிவங்களையும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.
★ இவற்றில் ழகர மெய் (புள்ளியோடு கூடிய மெய்) மட்டும் இக்கல்வெட்டுக்களில் வரவில்லை. மற்ற மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.
★ உயிர்மெய் வரிவடிவங்கள் நன்கு அறியும் வகையில் தெளிவாக எழுதப் பெற்றுள்ளன. ஒகரம் ஏறிய “கொ, தொ” ஆகிய இரண்டு குறில்களும் அவை குறில் எழுத்துக்கள் என்று அறியும் வண்ணம் தலைக்கு மேலே புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம்:
★ இவற்றின் எழுத்துக்கள் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு கால (பொ.ஆ 550-575) நடுக்கல் கல்வெட்டுக்களுக்கு முந்தியவை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நேரத்தில் எழுத்து வளர்ச்சி மெதுவாகவே ஏற்பட்டிருக்கக் கூடுமாதலால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் பொ.ஆ 500க்கு முந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. என்றாலும் வேறு உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையில் இவற்றின் காலம் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே நல்லது. சக ஆண்டு அடிப்படையில் பொ.ஆ மூன்றாம் நூற்றாண்டு என்று திரு.நாகசாமி வெளியிட்ட கருத்து அவ்வளவு வலுவுடையதாகத் தெரியவில்லை. இவற்றின் எழுத்துக்கள் பிராமி, வட்டெழுத்துக்களில் எ, ஒ ஆகிய இரண்டும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.
★ அதாவது புள்ளியிடாதவை நெடில்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இலக்கண வழுக்கள் இல்லையெனும் அளவுக்கு மொழிநடை உள்ளது. வேள்கூரு, அவரு, கேட்டாரு, செதாரு என்ற சில பேச்சு வழக்குகள் விரவி வந்துள்ளன.
செய்தித் தொகுப்பு:
★ இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசன் ஆட்சியில் நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது.
★ வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது.
★ அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளது.
★ அரசனது ஆணையை ஒருவர் கேட்டு பின்னர் அவ்வாணை யானது அது ஓலையில் எழுதப்பெற்று இறுதியில் அது கல்லில் பொறிக்கப் பெற்றுள்ளது.
★ இந்த நடைமுறை கல்வெட்டுக்களில் அழகுற விளக்கப் பெற்றுள்ளது. ஒரு தேவகுலம் ஓல்லையூர்க் கூற்றத்தைச் சேர்ந்த வேள்கூரில் பச்செறிச்சல் என்ற மலை மீது இருந்தது. இது கல்வெட்டுள்ள பூலாங்குறிச்சி மலையையே குறிக்கும்.
★ வரி 8–9 இதைத் தெளிவுபடுத்தும். இரண்டாம் தேவகுலம் முத்தூற்றுக் கூற்றத்தைச் சேர்ந்த விளமர் என்ற ஊரில் இருந்தது. முத்தூற்றுக் கூற்றம் இன்றைய அறந்தாங்கி, திருவாடானை வட்டங்களை உள்ளடக்கிய நிலப்பிரிவு.
★ பூலாங்குறிச்சியிலிருந்து விளமர் 50-60 கி.மீ தொலைவில் இருந்திருக்க வேண்டும். மூன்றாவதாக வரும் வாசிதேவனாருக்குரிய கோட்டம் மதிரையில் உலவியத்தான் என்ற குளத்துக்கு வடக்கில் இருந்த தாபதப்பள்ளியுள் எழுப்பப்பட்டது. மதிரையை இன்றைய மதுரையாகவே கொள்ளவேண்டும்.
★ அதுவும் பூலாங்குறிச்சியில் இருந்து 50-60 கி.மீ தொலைவில் உள்ளது.தேவகுலங்கள், திரு.நடன காசிநாதன் கருத்து தெரிவித்தபடி, பெரும்பாலும் சிவன் அல்லது விஷ்ணு கோயில்கள் ஆகலாம். பூலாங்குறிச்சி மலைமேல் இப்பொழுது ஒரு சிவன் கோயில் உள்ளது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் அவ்வளவு பழமையானதல்ல. விளமரின் சரியான இலக்கு இன்னும் தென்படவில்லை.
★ வாசிதேவனார் கோட்டம் தாபதப்பள்ளியைச் சேர்ந்தது எனப்படுவதாலும் தாபதப்பள்ளி ஜைன சமய நிறுவனம் என்று பரலாகத் தெரிவதாலும் வாசிதேவனார் கோட்டம் ஒரு ஜைன கோயில் எனலாம்.
★ அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகியோர் இம்மூன்று கோயில்களுக்கும் வேண்டியதைச் செய்வதாக ஏற்றுக்கொண்டனர்.
★ இக்கோயில்களில் வழிபாடு நடத்துபவரை நியமிக்கும் பொறுப்பு பாண்டங்கர், சேவுக்கர், விரும்மசாரிகள், தருமிகள், ஊர்க்காவல் கொண்டார் என்ற குழுக்களைச் சேர்ந்தது என்றும் அவர்களால் நியமிக்கப்படுவோர் தவிர பிறர் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் விதிக்கப்பட்டது.
★ மேலும் குழலூருத்துஞ்சிய உடையார் என்பவரால் இக்கோயில்களில் ஒன்றான பச்செறிச்சில் மலைக் கோயிலுக்கென்று குடும்பியர் வேள்கூரில் (அதாவது உள்ளூரில்) குடி ஏற்றப்பட்டனர் என்றும், இக்குடும்பியர் தவிர வேறு குடம்பியர் (குடும்பு) தவிர்க்கப்படவேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.
★ அடுத்து, பொதுப்படக் கோயிலுக்கு வேண்டியது செய்து, தீங்கிழைப்பவரைத் தண்டிப்பீராக என்று ஆணை கொடுக்கப்பட்டது.
★ ஆணையை முன்னின்று கேட்டவர் எயினங்குமான் (எ.இனங்குமரன்), கீரங்காரி, குமாரம்போந்தை என்று மூவர். ஒவ்வொருவரும் ஊர்க்கிழான் என்றும், உலவியப் பெருந்திணை என்றும் சிறப்புப் பெற்றவர். இந்த ஆணையை ஓலை எழுதுவான் தமன் காரிகண்ணன் தான் கேட்டவாறு கூற அதை வேணாட்டான் நரியங்காரி என்பவர் கல்லில் பொறித்ததையே எழுதிக் கொடுத்ததாகச் சுட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.
கல்வெட்டு : 2. தரும் செய்தி:
★ அதாவது (பூலாங்குறிச்சி) பச்செறிச்சில் மலைமேல் எழுப்பப்பட்ட தேவகுலம் அல்லது கோயில் கொடைப் பெற்றுள்ளத்தைக் குறிப்பிடுகிறது.
★ அக்கோயிலுக்கு மேற்குறிப்பிட்ட நில உரிமைகளோடு பாண்டிநாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்கிழமை, களக்கிழமை, மேலாண்மை உரிமைகளும், காலாசமும், தோட்டங்களும் இருந்தன. அவை யாவற்றையும் அவருடைய குடிகளையும் பிரம்மதாயமுடையார், நாடுகாப்பார், புறங்காப்பார், முப்புருகாப்பார் முதலியோர் பேணிக்காக்க வேண்டும் என்பதும் தீங்கிழைத்தவர்களுக்கு ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் விதிக்கவேண்டும் என்பதும் அக்கல்வெட்டுச் செய்தியாகும்.
பூலாங்குறிச்சி கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு : 1
1. கொச்சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் (பன்னிரண்டு) வேள் மருகன் மகன் கடலகப் பெரும்படைத்
3. தலைவன் எங்குமான னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலைமேற் செஇவித்த தேவகுலமும்
4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை ஆத்திக்கோயத்தாரு முள் மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
6. ஆவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட ஆறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ருஅ) ராஇந்து வைக்கப்பட்டாரு அல்லது வழிபடப் 8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி)ல்) மலைமேற் செவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேவொரு) குடும்பாடப் பெறாமையும்
10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய..க(ளு)..(டஞ்) செயவும் மெழுதி வைக்கென்றருள்ளித்தாரு
11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப…… அறு கிழான் கீரங்காரி
12. யு முலவியப் பெருந்திணை ஆம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
13. கண்ணன் இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (நரி) நாரியங்காரி
கல்வெட்டு : 2
1. ………. ந்தற்கு யாண்டு நூற்றுத் ………. ……………
2. நா(ற்) ….. ர.ப. ………
3. (னு) …. ….. ளள் (ளை) … …. …. ….
4. … … … … (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
5. … … …. … ன் ஒல்லையூருக்கூற்(ற்)
6. … …. … ….. ….. ….
7. … செ … வகள … வய … …. …
8. … …. …. …. …. … …
9. (பெ)ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
10. … (ழவரும்). ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
11. ……….. ழமையும் மீயாட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
12. …. ….. … புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
13. … … … துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
14. …. றாராலும் பிரம் ….யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
15. … நிலனும் பிறவுஞ் …. பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
16. க் கிழமையும் மேல் (லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
17. வரு குடிகளையும் … …. டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
18. பாரும் முப்பு (ரு காப்பாரு) … …. தாயந் நெறி ஆ … செதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
19. று காணந் … று …. டுவே …. ன்ற ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
20. மானும் முலவி ……. ம…….. ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை அலத்தூர் கி
21. … …. …. லை .. துவான் (றமன்வ)டுகங் குமான் …டைப்பில் (ஒ)
22. … (தளருக்கு) … …. ….